Tamil songs of Pattukkottai Kalyanasundaram
Posted By kalyan on April 20, 2008
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்
1. சின்னப் பயலே, சின்னப் பயலே
சின்னப் பயலே, சின்னப் பயலே
சேதி கேளடா – நான்
சொல்லப் போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா, நீ
எண்ணிப் பாரடா.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி – உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
நாலும் தரும் பயிற்சி – உன்
நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி (சின்னப் பயலே )
மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா – தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
வலது கையடா – நீ
வலது கையடா
தனி உடைமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா – நீ
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா – எல்லாம்
பழைய பொய்யடா (சின்னப் பயலே)
வேப்ப மர உச்சியில் நின்னு
பேய் ஒன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க – உந்தன்
வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க – அந்த
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கை யாகக் கூடநம்பி விடாதே -உந்தன்
வீட்டுக் குள்ளே பயந்து
கிடந்துவெம்பி விடாதே – நீ
வெம்பி விடாதே (சின்னப் பயலே)
2. திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே
திருடாதே, பாப்பா திருடாதே
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ – தவறு
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா -அது
திரும்பவும் வராம பார்த்துக்கோ (திருடாதே)
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது – அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது (திருடாதே)
கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிற தெல்லாம் பொதுவாய் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுது ஆகிட்டா
கீழும் மேலும் புரளாது
உழைக்கிற நோக்கம் உறுது ஆகிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது (திருடாதே)
——-
3. தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
தர்மமென்பார் நீதி என்பார் தரமென்பார்
சரித்திரத்து சான்று செல்வார்
தாயன்பு பெட்டகத்தை
சந்தியிலே எறிந்து விட்டு
தன்மான வீரனென்பார்
மர்மமாய் சதி புரிவார் -
வாய் பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினை என்பார் – பிரமன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்
கர்ம வினை என்பார் – பிரமன் எழுத்தென்பார்
கடவுள் மேல் குற்றமென்பார்
—
4. இந்த திண்ணைப் பேச்சு
இந்த
திண்ணைப் பேச்சு வீரரிடம் – ஒரு
கண்ணா யிருக்கணும் அண்ணாச்சி – நாம
ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.
எந்நாளும் உலகில்
ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை
உண்டாக்கணும்.
பொது நலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அநேக வித்யாசம்.
புதுப் புது வகையில் புலம்புவ தெல்லாம்
புத்தியை மயக்கும் வௌi வேஷம்
பொல்லாத மனிதர்
சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும்
கொண்டாட ணும். (இந்த திண்ணைப் பேச்சு)
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு – பழங்
கதைகளைப் பேசிகாலம் வீணாக்கி.
கையாலே முன்னேற்றம்
கண்டாகணும். (இந்த திண்ணைப் பேச்சு)
நாடி தளர்ந்தவங்க. ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கணத்தவங்க தாடி வளத்தவங்க
பலப்பல வேலைகளில் பங்கெடுத்து கொண்டவங்க
படிப்பவங்க பீடி குடிப்பவங்க
பொடிப் பசங்க பெரும் போக்கிரிங்க -இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும் வெச்சுமாடா இழுக்குரோம் வேகமா – நம்ப
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா – இந்த
வண்டிய உருட்டி
வறுமையை விரட்டி
வாழ்ந்தாலும் சாய்ந்தாலும்
ஒண்ணாகணும். (இந்த திண்ணைப் பேச்சு)
———–
5. நாத்து அலங்காரமா
நாத்து அலங்காரமா
நாத்து முடி சிங்காரமா
நடவு நடும் பெண்களுக்கு
நடவழகு ஒப்பாரமா
ஏரு அலங்காரமா
ஏரு மாடு சிங்காரமா
ஏரு ஓட்டும் பையனுக்கு
தாரு குச்சி ஒப்பாரமா
வரப்பு அலங்காரமா
வரப்புகளும் சிங்காரமா
வரப்பு வெட்டும் பையனுக்கு
வட்டப் பொட்டு சிங்காரமா
கூந்தல் அழகியடி
கோது கொண்டை காரியடி
உருண்ட முழியழகி
குண்டுமணி கண்ணழகி
வண்டி அலங்காரமா
வண்டி மாடு சிங்காரமா
வண்டி ஓட்டும் பையனுக்கு
சாட்டை குச்சி ஒப்பாரமா
நாழு முழ ஓரத்திலே
வரப்பு வெட்டும் சின்னபையா
வரப்பு வெட்டும் பையனுக்கு
கோமணத்தான் ஒப்பாரமா
வரப்பு அலங்காரமா
மம்பட்டியும் ஒப்பாரமா
வரப்பு வெட்டும் பையனுக்கு
கோணவாக்கு ஒப்பாரமா.
—————-
6. எண்ண பண்ணி கிழிச்சீங்க
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யறதைச் செஞ்சிடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க.
முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
முளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க
ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலே ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க. (சொல்லுரத ..)
முடியிருந்தும் மொட்டைகளாய்
முச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்து கிடக்கப் போறீங்களா?
முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாறீங்களா? (சொல்லுரத)
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தாஜ் படிச்சீங்க
என்னபண்ணி கிழிச்சீங்க. (சொல்லுரத)
————-
7. ஆம்பளைக் கூட்டம் – ஆடுற கூட்டம்
ஆம்பளைக் கூட்டம் ஆடுற கூட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம் – அதை
ஆரம்பிச்சத் தெரியும் திண்டாட்டம் . (ஆம்பளை..)
அடங்கிக் கிடக்கிறதும் பனிஞ்சி நடக்கிறதும்
ஆக்கறதும் காக்கறதும் நாங்க – உண்
டாக்கறதும் காக்கறதும் நாங்க – அதை
அடிச்சிப் பறிக்கிறதும், அடுத்துக் கெடுக்கிறதும்
அட்டகாசம் பண்ணறதும் நீங்க. (ஆம்பளை…)
ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க – அன்று
யாரோ எழுதி வைச்சாங்க – அதை
அழுக்கிப் பிடிச்சுகிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்து கிட்டாங்க – பெண்கள்
ஆமை போல் ஒடுங்கிப் போனாங்க. (ஆம்பளை..)
மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு, மண்டை வரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாளும்
கடைசியில் சாக மட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு. (ஆம்பளை..)
கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
கச்சிதமாத் திட்டுவாங்க – அதை
அச்சடிச்சும் காட்டுவாங்க – சொன்ன
கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
கன்னக் கோலைத் தீட்டுவாங்க – அவுங்கக்
கணக்கைப் புரட்டிப் பாருங்க – என்னங்க. (ஆம்பிளை..)
————-
8. இவன் சோறு போடுவான், அவன் கூறு போடுறான்
மனுசனைப் பாத்திட்டு உன்னையும் பாத்தா
மாற்றமில்லேடா ராசா எம்
மாற்றமில்லேடா ராசா எம்
மனசிலே பட்டதை வௌiயிலே சொல்றேன்
வந்தது வரட்டும் போடா. (மனுசனை)
உள்ளதைச் சொன்ன ஒதைதான் கெடைக்கும்
ஒலகம் இதுதாண்டா .. ராசா
ஒலகம் இதுதாண்டா
உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு
உல்லாச புரிதாண்டா இது
உல்லாச புரிதாண்டா.. (மனுசனை)
வசதியிருக்கிறான் தரமாட்டான் – அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான் (மனுசனை)
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா நான்
பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்குப்
பயணம் போறேண்டா . (மனுசனை)
ஒரு சிறுவன் -
அங்கே நானும் வரேண்டா ..
வௌiயே படிக்க வேண்டியது நிறைய இருக்குப்
படிச்சிட்டு வாரேண்டா – சிலர்
படிக்க மறந்தது நிறைய இருக்குப்
படிச்சிட்டு வரேண்டா. (மனுசனை)
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான் இவன்
சோறு போடுறான் – அவன்கூறு போடுறான்.
————-

Comments
Leave a Reply
Please note: Comment moderation is currently enabled so there will be a delay between when you post your comment and when it shows up. Patience is a virtue; there is no need to re-submit your comment.
You must be logged in to post a comment.